சமீப காலமாக உடல்நலத்தில் அக்கறை காட்டும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்கவும், நோய்களைத் தவிர்க்கவும் நடைப்பயிற்சி ஒரு எளிய மற்றும் பாதுகாப்பான தீர்வாக பலரால் தேர்வு செய்யப்படுகிறது. ஆனால், சிலர் காலையில் நடைப்பயிற்சி செய்கிறார்கள் மற்றவர்கள் மாலையில் நடக்கிறார்கள். இந்நிலையில், எப்போது நடப்பது அதிக உடல்நல பலனை தரும்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
காலை நடைப்பயிற்சியின் நன்மைகள்: காலை நடைப்பயிற்சி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் நடைப்பயிற்சியை முக்கிய உடற்பயிற்சியாக தேர்வு செய்து வருகின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, காலையில் விறுவிறுப்பாக நடப்பது நாள் முழுவதும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் வழங்குகிறது. அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால், உடலில் கலோரி எரிதல் அதிகரித்து, மெடபாலிசம் சுறுசுறுப்படைகிறது.
மேலும், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது, உடலில் சேமிக்கப்பட்டுள்ள கூடுதல் கொழுப்பை நேரடியாக எரிக்க உதவுகிறது. இதன் மூலம் எடை குறைப்பில் சிறந்த பலன் கிடைக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல், இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதும் உடல்நலத்திற்கு பயனுள்ளதாகக் கூறப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரவு நேர பசி குறைவதோடு, தேவையற்ற எடை அதிகரிப்பையும் தடுக்க முடியும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காலை நடைப்பயிற்சி உடல்நலத்திற்கே அல்லாமல், மனநலத்திற்கும் மிகுந்த பயன் அளிக்கிறது. மன அழுத்தம் குறைதல், மனநிலை மேம்பாடு, நாள் முழுவதும் அமைதி ஆகியவை நடைப்பயிற்சியின் முக்கிய பலன்களாக குறிப்பிடப்படுகின்றன. மருத்துவர்கள் கூறுகையில், தினமும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்தால், அதிகப்படியான கொழுப்பு எரிந்து உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மாலை நேர நடைப்பயிற்சியின் நன்மைகள்: மாலை நேர நடைப்பயிற்சி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், தூக்கத்தின் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதன்படி, உடல் ஆரோக்கியத்தை பேண நல்ல இரவு தூக்கம் அவசியம். இந்நிலையில், மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது, நாள்தோறும் உருவாகும் மன அழுத்தம் மற்றும் வேலைச் சுமையை குறைத்து, இரவில் நன்றாகவும் ஆழமாகவும் தூங்க உதவுகிறது.
மேலும், நாள் முழுவதும் சேர்ந்திருக்கக்கூடிய மன அழுத்தம், பதட்டம் மற்றும் சோர்வு ஆகியவற்றை வெளியேற்ற மாலை நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது. குறிப்பாக அலுவலக வேலை, நீண்ட நேர மன உழைப்பு கொண்டோர், வயதானவர்கள் ஆகியோருக்கு மாலை நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.மாலை நடைப்பயிற்சி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் போது, மனநிம்மதி அதிகரிப்பதோடு, உடலும் மனமும் ஓய்வடைந்து ஆரோக்கியமான தூக்கச் சுழற்சி உருவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடைப்பயிற்சிக்கு சிறந்த நேரம் எது? சூரிய உதயத்திற்குப் பிறகு சிறிது நேரம் காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் லேசான சூரிய ஒளி மற்றும் புதிய காற்று போன்ற இயற்கை சூழலை முழுமையாக அனுபவிக்க முடியும். சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறப்படுகிறது. காலை 6.30 மணிக்கு முன் நடைப்பயிற்சியை முடிக்க வேண்டும். மாலை ஆறு முதல் எட்டு மணி வரை உங்களுக்கு வசதியான நேரத்தில் நடக்கலாம். இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது எடையைக் குறைக்க உதவும்.
Read more: மீண்டும் பதற்றம்.. கம்போடியாவின் சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகே தாய்லாந்து தாக்குதல்; பலர் காயம்..!



