கோடை விடுமுறையின் போது பெற்றோர்களால் பள்ளி மாணவி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதுகரை பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவி ஒருவர், கோடை விடுமுறையின் போது தன்னுடைய பெற்றோர்களால் பல்வேறு ஆண்களிடம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தார். உடனே ஆசிரியர் சைல்ட்லைன் 1098 மற்றும் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில், சிறுமியின் தாய் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததும், தற்போது மூன்றாவது கணவர் முருகனுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. இருவரும் சேர்ந்து, 40 முதல் 60 வயது வரை உள்ள 13 பேரிடம் மாணவியை அனுப்பி வைத்து பணம் சம்பாதித்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. மதுரங்கத்தில் உள்ள லாட்ஜிலும், பல வீடுகளிலும் இந்தச் செயல் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதற்காக திட்டமிட்டு கோடை விடுமுறை காலத்தை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த வன்கொடுமைகளிலிருந்து தப்பிக்க, சிறுமி பள்ளி விடுதியில் தங்கி வந்தார். ஆனால், விடுமுறையில் வீட்டுக்கு வா என அன்பாக அழைத்துக் கொண்டு சென்ற பெற்றோர், மீண்டும் அவளை பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளனர்.
தற்போது, சிறுமி அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், மாணவியின் தாய் மற்றும் முருகன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை வன்கொடுமை செய்த 13 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்..? வானிலை மையம் கொடுத்த அப்டேட்..!