மும்பையில், 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், தனது தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து தன்னைப் பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளியதாக காவல் நிலையத்தில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை தனக்கு நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி, அந்தச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இவர்களின் தொல்லை தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் அச்சிறுமி வீட்டை விட்டு ஓடி, தோழியின் வீட்டில் 3 நாட்கள் தங்கியுள்ளார்.
அதன் பிறகு, வீட்டிற்குத் திரும்பிய சிறுமிக்குக் கடுமையான அடி உதைகள் விழுந்துள்ளன. இதன் காரணமாக, அவர் மீண்டும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது இந்தச் சோகமான நிலை குறித்துச் சிறுமி தன் தோழியிடம் கூறி அழுதுள்ளார்.
பின்னர், அச்சிறுமி, பள்ளியில் தனது ஆசிரியர்களிடம் தான் அனுபவித்த கொடுமைகள் அனைத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சிறுமியின் நிலையை அறிந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து முறைப்படி புகார் அளித்தது.
சிறுமி அளித்த வாக்குமூலம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, காவல்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். பள்ளி மாணவியை தாயே பாலியல் தொழிலில் தள்ளிய இந்தச் சம்பவம், மும்பையில் உள்ள பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



