உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகளை, தாய் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் பண்ருட்டியைச் சேர்ந்த சௌந்தர்யாவுக்கும் 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெங்கடேசன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். வெங்கடேசன் கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது.
கணவர் எங்கு சென்றார் என்று தெரியாமல் உறவினர்கள் தேடி வந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் தினமும் சௌந்தர்யாவை நெருக்கினர். அப்போது, வெங்கடேசனுக்குக் கடன் கொடுத்தவர்களில் ஒருவரான நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருடன் சௌந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
சமீபத்தில், சௌந்தர்யா தனது இளைய சகோதரிக்கும் தாய் மாரிமுத்துவுக்கும், குழந்தையுடன் திருச்சிக்கு செல்வதாகத் தகவல் அளித்துவிட்டு, ஆனந்தன் ஓட்டி வந்த காரில் மகளுடன் திருச்சிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு பேருந்து நிலையத்தில், தனது 3 வயது மகளிடம், “இனிமேல் ஆனந்தனைத்தான் அப்பா என்று கூப்பிட வேண்டும்” என்று சௌந்தர்யா வற்புறுத்தியுள்ளார். அதற்குச் சிறுமி மறுப்புத் தெரிவித்ததால், சௌந்தர்யா கோபமடைந்து மகளைத் தாக்கித் துன்புறுத்தியுள்ளார்.
அன்று இரவு அங்குள்ள ஒரு விடுதியில் ஆனந்தன் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அப்போது ஆனந்தன், 3 வயதுச் சிறுமியை உடலில் பல இடங்களில் அடித்து உதைத்துள்ளதுடன், தாய் சௌந்தர்யாவும் தனது மகளின் பிறப்புறுப்பில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் அதிகாலை, குழந்தையின் முகத்தில் முகக்கவசம் அணிவித்த நிலையில், வீட்டின் அருகில் விட்டுவிட்டு ஆனந்தன் சென்றுள்ளார். அதன் பிறகு, சௌந்தர்யா தன் மகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பியுள்ளார். அங்குச் சிறுமி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், அங்கன்வாடி ஊழியர் முகக்கவசத்தை கழற்றிப் பார்த்தபோது, குழந்தையின் உதடு பகுதியில் காயம் இருப்பதைக் கண்டு விசாரித்துள்ளார். அப்போதுதான் நடந்த கொடூர செயல்களை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.
சிறுமி துன்புறுத்தப்பட்ட விவரம் அறிந்த சௌந்தர்யாவின் தாயும், இளைய சகோதரியும் நேரில் வந்து சௌந்தர்யாவிடம் கேட்டபோது, அவர் தாயையும் சகோதரியையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளார். இதையடுத்து, மனமுடைந்த தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொடூரச் செயலில் ஈடுபட்ட தாய் சௌந்தர்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆனந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



