திருமண உறவில் இருந்து கணவர் வெளியேறினாலும், தனது மாமியார் வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கு மனைவிக்கு உரிமை உண்டு என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்த ஒரு தம்பதியினரின் குடும்பச் சிக்கலை சார்ந்தது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், கணவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மகன் மற்றும் மருமகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு மாமியார் கூறியுள்ளார். ஆனால், மருமகள் அந்த வீட்டிலேயே தொடர்ந்து வசித்துள்ளார். இதனால், மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்துள்ளது. இந்த சூழலில், தனது மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற கோரி மாமியார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் (மாமியார்) தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜல் சந்திரா, இந்தச் சொத்து மாமியாரின் மறைந்த கணவர் சுயமாக சம்பாதித்தது என்றும், எனவே ‘குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்’ கீழ் இது மருமகளுக்கு பகிரப்பட்ட குடும்பமாக கருதப்படாது என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “திருமணத்திற்குப் பிறகு மனைவி தனது கணவருடன் மாமியார் வீட்டில் வசிக்கும்போது, அதுவே அந்த மனைவியின் குடும்பம் ஆகும். பெற்றோர்களால் கணவர் கைவிடப்பட்டாலும் அல்லது விலகிச் சென்றாலும், அந்த வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கு மனைவிக்கு உரிமை உள்ளது,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இரு தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு, மாமியார் முதல் தளத்திலும், மருமகள் தரைத் தளத்திலும் தொடர்ந்து வசிக்கலாம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, மாமியார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்தார்.



