கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 33 வயதுப் பெண், தனது 12 வயது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில், தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் தலா 180 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்பெண்ணுக்குப் பாலக்காட்டைச் சேர்ந்த 36 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக அப்பெண் கணவரைப் பிரிந்து மகள் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார். அப்போது, அப்பெண்ணின் கள்ளக்காதலன், அவரது 12 வயது மகளை ஓராண்டு காலமாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
அந்த நபர் சிறுமிக்கு மதுபானம் கொடுத்தும், ஆபாசப் படங்களைக் காட்டியும் பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த அனைத்துக் கொடூரச் செயல்களுக்கும் சிறுமியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து சிறுமியை மிரட்டி வந்துள்ளனர்.
சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பள்ளியில் உள்ள ஆசிரியரிடம் தனக்கு நடந்த அனைத்தையும் கண்ணீருடன் கூறியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 180 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதோடுமட்டுமல்லாமல், அவர்களுக்குச் சேர்த்து ரூ. 11.75 லட்சம் அபராதமும் விதித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவரும் தவனூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.



