கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 வயது குழந்தைக்கு விஷம் வைத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்கில், தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரூபினி. கணவர் பால்ராஜுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரூபினி தன் கணவரை பிரிந்து 3 வயது குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்தச் சமயத்தில், ரூபினிக்கும் சற்குணம் என்பவருக்கும் இடையே நட்பு ரீதியாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் தனிமையில் சந்திப்பதற்காக சென்றபோது, 3 வயது குழந்தையையும் ரூபினி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, தங்கள் தனிமையில் குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணிய ரூபினி, ஒரு விபரீத முடிவெடுத்தார். அவர் பிஸ்கட்டில் விஷம் வைத்துக் குழந்தைக்குக் கொடுத்து, அதனைக் கொலை செய்தார்.
இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, ரூபினியையும் கள்ளக்காதலன் சற்குணத்தையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில், நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அதன்படி, அவர்கள் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற குழந்தையைக் கொன்ற இந்தச் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



