பருவமழை மற்றும் குளிர் காலங்களில் வேகமாக பரவும் வைரஸ் தொற்றுகளை துல்லியமாக, விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, தமிழக அரசு முக்கிய முன்னெடுப்பொன்றை அறிவித்துள்ளது. இனி அரசு மருத்துவமனைகளில் ஒரே பரிசோதனையில், ஐந்து முக்கிய வைரஸ் தொற்றுகளை கண்டறியும் மல்டிபிளெக்ஸ் RT-PCR பரிசோதனை முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தரமான மல்டிபிளெக்ஸ் ஆர்டி-பிசிஆர் (Multiplex RT-PCR) பரிசோதனை உபகரணங்களை வெகுவிரைவில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் வழங்க இருக்கிறது. புதிய பரிசோதனை முறையில் கீழ்கண்ட 5 வைரஸ்கள் ஒரே நேரத்தில் கண்டறியப்படும்:
- கொரோனா (COVID-19)
- இன்ஃப்ளூயன்ஸா A
- இன்ஃப்ளூயன்ஸா B
- RSV (Respiratory Syncytial Virus) A
- RSV B
இந்த வைரஸ்கள் பொதுவாக காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல் வலி போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் ஒவ்வொன்றிற்குமான சிகிச்சை முறைகள் முற்றிலும் மாறுபடுகின்றன. எனவே, சரியான நோயைக் கண்டறியாமல் சிகிச்சை கொடுக்கப்படும்போது, பலவீனம், சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
முன்னர், ஒவ்வொரு நோயுக்கும் தனித்தனி பரிசோதனை செய்ய நேரம் எடுத்துக்கொண்டது. புதிய முறையின் மூலம் ஒரே பரிசோதனையில் எல்லா வைரஸ்களும் கண்டறியப்படும். 1 முதல் 1.5 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகள். நோயாளிக்கு உடனடி சிகிச்சை தொடங்கும். பாதிப்பு தீவிரமாகும் முன்பே தடுக்க இயலும்.
முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த புதிய பரிசோதனை உபகரணங்கள் நிறுவப்படுகின்றன. பின்னர் தேவையின் அடிப்படையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, ஒரு RT-PCR பரிசோதனைக்கு அரசு சுமார் ரூ.250 செலவிடுகிறது.
அதேபோல, இந்த மல்டிபிளெக்ஸ் RT-PCR பரிசோதனைக்கும் அதே செலவு மட்டுமே வருகிறது. இது தனியார் மருத்துவமனைகளில் ரூ.3,000–ரூ.6,000 வரை வசூலிக்கப்படும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் மக்கள் இலவசமாக இதனைப் பெற முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், “தற்போதுள்ள RT-PCR முறையில், ஒரே நேரத்தில் ஒரு நோயைக் கண்டறிய முடியும். ஆனால் இனி ஒரே மாதிரியில் பஞ்சு மாதிரி (Swab) மூலம் 5 வைரஸ்களை கண்டறியலாம். இது மருத்துவமனைகளின் சுமையை குறைக்கும்; சிகிச்சையை வேகப்படுத்தும்,” என தெரிவித்தனர்.
பருவமழை மற்றும் குளிர் காலத்தில் வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவக்கூடியவை. இதைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்துக்குள் இந்த புதிய பரிசோதனை முறையை அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் முழுமையாக அமல்படுத்தும் பணிகள் தீவிரமாக உள்ளன.
தமிழக அரசு எடுத்து வரும் இந்தத் தீர்மானம், சுகாதாரத் துறையில் ஒரு புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நோயைக் கண்டறியும் நேரத்தையும், சிகிச்சை தொடங்கும் நேரத்தையும் குறைத்து, மக்களின் உயிரைக் காக்கும் இந்த முயற்சி, மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியான ஓர் உதாரணமாக இருக்கிறது.
Read more: முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜானிக் சின்னர்!. விஜய் ஸ்டைலில் வைரலாகும் பதிவு!