சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து பொது ஏலத்தில் விடுவதற்கு புதுச்சேரி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அடைப்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும் நகராட்சி ஆணையர் அல்லது அவர் நியமிக்கும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பொதுப்பணித்துறையுடன் இணைந்து பிடிக்கப்படவுள்ளன.
பிடிபடும் மாடுகள் உரிமையாளர்களுக்கு உடனடியாக திருப்பி வழங்கப்படாமல், கோசாலைகள் அல்லது கால்நடை பட்டில்களில் அடைக்கப்பட்டு, பின்னர் பொது ஏலத்தில் விடப்படும் என நகராட்சி அறிவித்துள்ளது. கால்நடைகளை வளர்ப்போர், நகராட்சியிடம் முறையான உரிமம் பெற்று, தங்களுக்கு சொந்தமான இடங்களில் பாதுகாப்பான முறையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதை மீறும் பட்சத்தில், கண்டிப்பான நடவடிக்கையாக கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகர தெருக்களில் மாடுகள், நாய்கள் நடமாட்டம் குறித்து புகார் அளிக்க, புதுச்சேரி நகராட்சியால் தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



