கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருந்தை கிராமத்தில், போக்சோ வழக்கில் ஏற்பட்ட பகை காரணமாக 20 வயது இளைஞர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தை கிராமத்தில் மாதா கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்கு நேற்று முன்தினம் சிலர் வழிபாட்டுக்காக சென்றிருந்தனர்.
அப்போது, தேவாலயத்திற்கும் அருகிலிருந்த RC பள்ளிக்கும் இடையில், 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் அசைவின்றி கிடந்ததை மக்கள் கவனித்துள்ளனர். முதலில் அவர் போதையில் தூங்கிக் கிடப்பதாக நினைத்து யாரும் அணுகவில்லை. ஆனால் பிரார்த்தனை முடிந்து திரும்பியபோது அவர் இன்னும் அசையாமல் இருப்பதை கண்டு சிலர் அருகில் சென்று பார்த்தனர். உடல் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆண்டனி ஆரோக்கிய ஜோ (20) என்று அடையாளம் காணப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அதே கிராமத்தைச் சேர்ந்த தேவா என்ற நபர் மீதும், இறந்த ஆரோக்கிய ஜோ மீதும் கடந்த 2024ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது தெரியவந்தது.
இந்த வழக்கில் தேவா மீது குற்றம் சாட்டப்பட்டதால், அவரின் தம்பி லிசன் (20) கடும் கோபத்தில் இருந்துள்ளார். தனது அண்ணனை பாலியல் வழக்கில் மாட்டிவிட்ட ஆரோக்கிய ஜோவை பலி வாங்க திட்டம் தீட்டியுள்ளான். இதன்படி, சில நாட்களுக்கு முன்பு லிசன், மதுவுடன் ஆரோக்கிய ஜோவை மாதா கோவிலருகே வரவழைத்து, அவருக்கு அளவுக்கு மீறிய மது கொடுத்துள்ளார்.
மது போதையால் அவர் மயங்கி விழுந்தபோது, லிசன் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் மற்றும் முகத்தில் பலத்த அடிகளை கொடுத்து, சம்பவ இடத்திலேயே அவரை உயிரிழக்கச் செய்துள்ளார். பின்னர் உடலை அங்கேயே விட்டு தப்பி சென்றுள்ளார்.
போலீசார் விசாரணையின் மூலம் கொலை செய்தவர் லிசன் என்பதும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போக்சோ வழக்கில் ஏற்பட்ட பகை காரணமாக ஒரு இளைஞர் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



