சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்தில், பிரபல இசையமைப்பாளரின் மகள் உட்பட மொத்தம் 18 பேரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த ஆடம்பர ஓட்டலில், போதைப் பொருள் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, முன்தினம் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஓட்டலின் பப் பகுதியில் சோதனை முடிந்த பின், பார்ட்டியில் பங்கேற்றவர்கள் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த அறைகளுக்குள் நுழைந்தபோது, இளம் பெண்கள் மற்றும் வாலிபர்கள் கஞ்சா போதையில் தள்ளாடி, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கும், மகளிர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மகளிர் போலீசார் உதவியுடன், சூளைமேட்டை சேர்ந்த பிரவல்லிகா (23), திருவான்மியூரை சேர்ந்த ரெஜினா (21), விருகம்பாக்கத்தை சேர்ந்த துர்கா பவானி (25) ஆகிய 3 இளம் பெண்கள் உட்பட ஓட்டல் மேலாளர் மற்றும் 14 வாலிபர்கள் என மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சுமார் 5 கிராம் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
இவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழு மூலம் ஒருங்கிணைந்து, ஒவ்வொரு வாரமும் கஞ்சா மற்றும் மெத்தாபெட்டமின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தி உல்லாசமாக பார்ட்டி கொண்டாடுவது தெரியவந்தது. இந்த முறை, ‘அனந்தபுரத்து வீடு’ திரைப்படத்தின் இசையமைப்பாளரின் மகளான, பெங்களூருவைச் சேர்ந்த பிரவல்லிகா (23) என்பவர் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தனது ஆண் நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை வாங்கி, ஓட்டல் மேலாளர் சுகுமாரின் (43) உதவியுடன் அறைகளை எடுத்து இந்த பார்ட்டியை நடத்தியுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள், 2 பைக்குகள், 18 செல்போன்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 18 பேரும் எழும்பூர் நீதிமன்ற நடுவர் இந்து லதா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அனைவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதால் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், கஞ்சா மற்றும் மெத்தாபெட்டமின் எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள் என்பது குறித்து ஓட்டல் மேலாளர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் மகளிடம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பிரபலம் ஒருவரின் மகள் கஞ்சா பார்ட்டி கொடுத்து போலீசாரிடம் சிக்கியது, சென்னை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.