சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல அபு பேலஸ் ஹோட்டலில் இயங்கி வந்த ‘ஷேடோ (Shadow)’ பப்-பில், தடை செய்யப்பட்ட கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் சட்டவிரோதமாக நடைபெற்ற விருந்தில், இசையமைப்பாளர் ஒருவரின் மகள் உட்பட 18 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அபு பேலஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பப்பில் பார்ட்டி முடிந்ததை தொடர்ந்து, ஹோட்டலின் 3 தனி அறைகளில் கைது செய்யப்பட்ட நபர்கள் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதில் பங்கேற்ற 17 நபர்களுடன், ஹோட்டலின் மேலாளர் சுகுமாரையும் சேர்த்து மொத்தம் 18 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னையின் பல்வேறு பிரபலமான ஹோட்டல்களில் வார இறுதி நாட்களில் தவறாமல் நடைபெறும் போதை விருந்துகளில் கலந்துகொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அதன் மூலம் மாதம் இரண்டு முறை இத்தகைய ரகசிய விருந்துகளை ஒருங்கிணைத்து நடத்துவது வழக்கம் என்றும் போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக, ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவரின் மகளும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர்களிடமிருந்து 18 மொபைல் போன்கள், 3 கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் சக்திவேல் மற்றும் இர்பான் ஆகிய இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் பயன்படுத்திய வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 18 பேரையும் போலீசார் நள்ளிரவு நேரத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னை பெருநகர இரண்டாவது நீதித்துறை நடுவர் இந்து லதா, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். இருப்பினும், இந்த போதை விருந்துகளின் பின்னணியில் உள்ள சங்கிலியை உடைக்க போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



