ஹைதராபாத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் சுனிதா தம்பதியினர் கடந்த 2023-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து அமெரிக்காவில் குடியேறினர். அங்கேயே ஐடி துறையில் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட சந்தேகமும், பொருளாதார சிக்கல்களும் அவர்களது இல்லற வாழ்வைச் சிதைத்துள்ளன. கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய சுனிதா, சட்டப்பூர்வமாக மகேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
விவாகரத்திற்குப் பிறகு சுனிதா மறுமணம் செய்து கொண்டு, வனஸ்தலிபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது இரண்டாவது கணவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ஆனால், தனது முன்னாள் மனைவி வேறொருவருடன் வாழ்வதை ஏற்க முடியாத மகேஷ், ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனால், சுனிதாவை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மகேஷ், அதற்காக ஒரு பையில் மரக்கட்டை, கத்தி மற்றும் பெட்ரோல் கேன் ஆகியவற்றுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த சுனிதாவை வழிமறித்த மகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். சுனிதா நிலைகுலைந்து விழுந்த நிலையிலும் ஆத்திரம் தீராத மகேஷ், கத்தியால் அவரை சரமாரியாகக் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளார். சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது, கையில் இருந்த பெட்ரோல் கேனை காட்டி, “நெருங்கி வந்தால் அனைவரையும் எரித்துவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.
மகேஷின் மிரட்டலுக்கு அஞ்சாத பொதுமக்கள், ஒன்றிணைந்து அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அவருக்குத் தர்ம அடி கொடுத்து, உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சுனிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி மகேஷைக் கைது செய்துள்ள போலீஸார், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



