திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரியும் நாகராஜ், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்றில், பேராசிரியர் நாகராஜ் அந்த மாணவியிடம், “எனக்கு மனைவியிடம் படுக்கை சுகம் கிடைக்கவில்லை.. அதை நீ கொடுப்பாயா? இல்லையென்றாலும் பரவாயில்லை, என்னுடன் ஆடையின்றி படுக்க வருவாயா?” என்று மிக மோசமான முறையில் பேசியிருக்கிறார். இந்த ஆடியோ வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான பேச்சு, நாகராஜ் மாணவியை தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்த முயன்றதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
இந்த பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்த பிறகும், அவர் இந்த விவகாரத்தை முறையாக கையாளாமல், பேராசிரியருக்கு மறைமுகமாக ஆதரவாக செயல்பட்டு, விஷயத்தை மூடிமறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் கிருஷ்ணகிரியில் 8ஆம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், தற்போது முசிறியில் நடந்திருக்கும் இந்த சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



