நடிகர் கமல்ஹாசன், தமிழுடன் சேர்த்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சிறப்பாகப் பேசும் திறமையால் அனைவரையும் கவர்ந்தவர். ஆனால், அவர் பெங்காலி மொழி கற்றுக்கொண்டதற்கான உண்மையான காரணம் பற்றி, அவரது மகள் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் வெளிப்படுத்திய தகவல், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நடிகர் சத்யராஜ் நடத்திய சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்ருதி ஹாசன், தனது அப்பா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அப்போது சத்யராஜ், “உங்கள் அப்பா போலவே உங்களுக்கும் பல மொழிகள் தெரியும். அவர் ஒரு படத்துக்காகப் பெங்காலி மொழியையும் கற்றுக்கொண்டார்” என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், சிரித்தபடியே “அவர் படத்துக்காக பெங்காலி கற்கவில்லை.. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன்.. அப்பாவுக்கு அப்போது பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது காதல். அவரை ஈர்க்கவே பெங்காலி கத்துக்கிட்டார்!” என்று கூறியதால், நிகழ்ச்சியிலிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து பேசிய அவர், “அப்பா இயக்கிய ஹே ராம் படத்தில், நடிகை ராணி முகர்ஜி நடித்த கதாபாத்திரம் ஒரு பெங்காலி பெண். அந்த கதாபாத்திரத்துக்கு ‘அபர்ணா’ என்ற பெயரை அப்பாவே வைத்தார். இப்போ உங்களுக்கு கனெக்ஷன் புரியும்!” எனக் கூறினார்.
ஸ்ருதி ஹாசனின் இந்த வெளிப்படுத்தல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், “கமல்ஹாசனின் மொழி கற்றல் திறமைக்கு காதலும் ஒரு காரணமா?” என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். சிலர், இது கமலின் ரொமான்டிக் பக்கம் என்பதை உணர்த்துகிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் கடந்த 1977-ல் வெளிவந்த ‘கபிதா’ என்ற வங்க மொழி படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த ஒரேயொரு வங்க மொழி படம் அதுவே. தமிழில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: இந்த தண்ணீரை குடிப்பதால் புற்றுநோயை தடுக்க முடியுமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?