கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொள்ளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மேல குத்தவக்கரையை சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். லட்சுமணனும் அஞ்சலியும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ராமச்சந்திரன், லட்சுமணனுக்கு உறவினர் என்பதால், அடிக்கடி ராஜாவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது, ராஜாவின் மனைவிக்கும் லட்சுமணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் ராஜா வீட்டில் இல்லாத கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், இந்த கள்ளக்காதல் விவகாரம் ராஜாவுக்கு தெரியவந்த நிலையில், அவர் லட்சுமணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து லட்சுமணன், சென்னையில் உள்ள ஆவடி பகுதிக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதற்கிடையே, லட்சுமணனை பல மாதங்களாக தேடியும் கிடைக்காததால், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணனின் மனைவி அஞ்சலியை சந்தித்து, அவரது கணவர் இருக்கும் இடத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்காலில் லட்சுமணன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமணனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜாவும், அவரது நண்பர்களான ராகுல் உள்பட 4 பேர் கொண்ட கும்பலும், லட்சுமணன் சென்னையில் இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளனர்.
பின்னர், அங்கிருந்து லட்சுமணனை கொள்ளிடத்திற்கு கடத்தி வந்து, அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து அவரது உடலை வாய்க்காலில் வீசியது விசாரணையில் அம்பலமானது. இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் அவரது நண்பர் ராகுல் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.