மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 21). அதேபோல், தும்பப்பட்டியைச் சேர்ந்தவர் ராகவி (29). இவரது கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சதீஸ்குமாருக்கும் ராகவிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. காதலில் மூழ்கிப்போன இருவரும், அந்த ஊரை விட்டு, வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் தான், ராகவி வீட்டை விட்டு போகும்போது, வீட்டிலிருந்த நகைகளை எடுத்துச் சென்றதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, ராகவியை மீண்டும் அவரது பெற்றோருடனே சதீஸ்குமார் அனுப்பி வைத்து விட்டார்.
அப்போது, ராகவியின் சகோதரர் ராகுல் மற்றும் அவரது உறவினர்களான அழகர், ஆறுமுகம், சரிதா, கண்ணாயி, மணிமேகலை ஆகியோர் ராகவியை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எங்கும் வெளியே செல்லக் கூடாது என்றும் சதீஸ்குமாருடன் மீண்டும் சென்றால், இருவரையுமே கொலை செய்துவிடுவோம் என்று ராகவியை மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, வீட்டிலிருந்து எப்படியோ தப்பித்து வந்த ராகவி, சதீஸ்குமாருடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். “நாங்கள் இருவரும் மேஜர்.. சேர்ந்து வாழ விரும்புகிறோம்” எனக் கூறி போலீசிடம் பாதுகாப்பு கோரினர். பின்னர், இருதரப்பினரையும் போலீசார் அழைத்துப் பேசியுள்ளனர். இறுதியில் சதீஸ்குமாருடனே ராகவி அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சூழலில் தான், நள்ளிரவில் சதீஸ்குமார்-ராகவி இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்த ராகவியின் சகோதரர் ராகுல் அவரது நண்பர்கள் அய்யனார், அருள்பாண்டி ஆகியோர் சதீஸ்குமார் ஓட்டிச் சென்ற பைக்கை காரில் இடித்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர், சதீஸ்குமாரை இருள் சூழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் ராகவி படுகாயமடைந்தார். பின்னர், இதை பார்த்தவர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து சதீஸ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், ராகவி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ராகவி அளித்த புகாரின் பேரில் 8 பேருக்கு எதிராக கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருப்பதால், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : நீங்கள் ரூ.100, ரூ.200, ரூ.500-க்கு பெட்ரோல் போடுபவரா..? இதை படித்தால் இனி அப்படி போட மாட்டீங்க..!!