அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்..
ஆனால் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.. எனினும் இந்த பாடல்களை பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியதாக தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்தது.. மேலும் தொடர்புடைய இசை நிறுவனங்களிடம் முறையே அனுமதி பெற்று, பணம் கொடுத்து, தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என்றும், நோட்டீஸ் கிடைத்தது சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில், அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.. இந்த படத்தில் இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபாயு தாரேன் ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி உள்ளனர்.. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது.. எனவே இந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும்..
ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு, சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.. ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை.. எனது அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்பதால் படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.. உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்த மனு வரும் 8-ம் தேதி நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.



