தேனி மாவட்டம் ஆர்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ்குமார் (42). இவருக்கும், பள்ளி ஆசிரியரான ராஜப்பிரியா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், ராஜப்பிரியா அவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இந்த விவகாரம் கணவர் சதீஷ்குமாருக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், ராஜப்பிரியா தனது உறவை கைவிடவில்லை. இதனால், சதீஷ்குமார் தனது இரண்டு குழந்தைகளையும் குச்சனூரில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று அதிகாலை 1 மணி அளவில், ராஜப்பிரியா செல்போனில் சாட் செய்து கொண்டிருந்தபோது, சதீஷ்குமாருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சதீஷ்குமார் தனது தந்தை துரைசிங்கத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் துரைசிங்கம் தனது மனைவி முனியம்மாளுடன் ஆர்.எம்.டி.சி. காலனிக்கு வந்துள்ளார்.
சண்டை தொடர்ந்ததால், ராஜப்பிரியாவை அவரது சித்தி பரமேஸ்வரி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தனது உடமைகளையும், மருந்துகளையும் எடுப்பதற்காக ராஜப்பிரியா மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மாமனார் துரைசிங்கத்திற்கும், ராஜப்பிரியாவுகும் இடையே மீண்டும் தகராறு வெடித்துள்ளது.
அப்போது, குடிபோதையில் இருந்த துரைசிங்கம், “என் மகனின் வாழ்க்கையை நீ கெடுத்துவிட்டாய்” என்று கூறி அருகில் இருந்த கத்தியை எடுத்து ராஜப்பிரியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ராஜப்பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ராஜப்பிரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் மாமனார் துரைசிங்கம் சரணடைந்தார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.