உலகின் பல பகுதிகளில் பழங்குடி மக்கள் இன்னமும் தங்கள் இயற்கை சூழலில் தங்கி, நவீன நாகரிகத்திலிருந்து தள்ளி வாழ்கின்றனர். அவர்கள் வாழ்க்கை மரபுகள், நம்பிக்கைகள், மற்றும் இயற்கையுடன் கலந்த உறவுகள் பல புதிர்களை தாங்கி நிற்கின்றன. அதில் ஒன்று மெக்சிகோ நாட்டின் டில்டெபாக் (Tiltepec) என்ற சிறிய கிராமம். இது இப்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது, காரணம் இங்கிருக்கும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என யாருக்கும் பார்வை இல்லை என்பதே!
இக்கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் கண்கள் இயல்பாக இருந்தாலும், சில ஆண்டுகளில் பார்வை மங்கியடைய தொடங்குகிறது. வளர வளர, அவர்கள் முழுமையாக பார்வையிழக்கிறார்கள். இவ்வளவு பேரும் ஒரே பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பது இயற்கை சம்பவமா, சாபமா என்ற கேள்வி எழுகிறது.
பழங்குடி மக்களின் நம்பிக்கையின்படி, இது “லாவாசுவேலா” (Lavasuela) என்ற ஒரு மரத்தின் சாபம் காரணமாம். அந்த மரத்தைப் பார்த்தாலே பார்வை மங்கிவிடும்; மனிதர்கள், விலங்குகள், பறவைகள் கூட பார்வையிழக்கிறார்கள் என்றது அவர்களது நம்பிக்கை. அந்த மரம் பல நூற்றாண்டுகளாக கிராமத்தின் நடுவில் இருந்து வருகிறது.
ஆனால் விஞ்ஞானிகள் இதை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். டில்டெபாக் கிராமம் அமைந்துள்ள மலைப்பகுதியில் விஷ ஈக்கள் (toxic flies) காணப்படுகின்றன. அவை மனிதர்களைக் கடித்தால், கண்புரை (corneal infection) ஏற்பட்டு, பார்வை மெதுவாக இழக்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக இதை Onchocerciasis அல்லது River Blindness என்று அழைக்கிறார்கள்.
இதை அடிப்படையாகக் கொண்டு, மெக்சிகோ அரசு கிராம மக்களை வேறு இடத்திற்குத் தங்குமிடமாக மாற்ற முயன்றது. ஆனால் புதிய இடங்களின் சூழல் மற்றும் காலநிலை அவர்களது உடல் அமைப்பிற்கு பொருந்தவில்லை. உடல் சோர்வு, நோய், மன அழுத்தம் ஆகியவற்றால் பலர் மீண்டும் தங்கள் பழைய கிராமத்திற்குத் திரும்பி விட்டனர்.
இன்றும் அந்த கிராமம் “பார்வையற்றோரின் நிலம்” என அழைக்கப்படுகிறது. நவீன உலகம் இன்னும் அதன் மர்மத்தைக் களைய முடியவில்லை. சாபமா? உயிரியல் காரணமா? எது உண்மை என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.



