செர்னோபில் அணு உலை பேரழிவு நடந்து கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் கடந்துள்ளன. ஆனால் அந்த பேரழிவின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது அங்கு இடம்பெற்றிருக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணு உலைக்கு அருகில் வசிக்கும் பல நாய்கள் திடீரென நீல நிறமாக மாறியுள்ளன. இதனால் அந்த பகுதியில் பணிபுரியும் பராமரிப்பாளர்களும், விஞ்ஞானிகளும் குழப்பமடைந்துள்ளனர். நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, இந்த நாய்கள் 1986-ஆம் ஆண்டு அணுசக்தி வெடிப்பில் உயிரிழந்தவர்களின் செல்லப்பிராணிகளின் சந்ததியினர் என தெரியவந்துள்ளது.
விலக்கு மண்டலத்தில் விலங்குகளை பராமரித்து வரும் ‘டாக்ஸ் ஆஃப் செர்னோபில்’ என்ற அமைப்பினர் தெரிவித்ததாவது: “கருத்தடைக்காக நாய்களைப் பிடிக்கும் போது, மூன்று நாய்கள் முழுவதுமாக நீல நிறமாக இருந்தன. அதற்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, சில நாட்களுக்கு முன்பு வரை நாய்களின் ரோமங்கள் சாதாரணமாக இருந்தன. ஆனால் ஒரே இரவில் திடீரென அவை நீல நிறமாக மாறிவிட்டன என்றனர்.
நாய்கள் ஏதோ ஒரு ரசாயனப் பொருளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் அல்லது உட்கொண்டிருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் அந்த நாய்கள் இன்னும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த செர்னோபில் நாய்கள் திட்டம், 18 சதுர மைல் விலக்கு மண்டலத்திற்குள் வாழும் 700 நாய்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பராமரிப்பு வழங்கி வருகிறது. இப்போது, நாய்கள் மர்மமாக நீல நிறமாக மாறிய இந்த அதிசய சம்பவம், கதிர்வீச்சின் நீடித்த சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.



