கள் மீதான தடையை நீக்க கோரி போராட்டத்தை அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தடைகளை மீறி பனைமரம் ஏறினார்.
நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் தமிழ்நாட்டில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் கள்ளை மட்டும் இறக்க, விற்க தடைவிதிப்பதா என இந்த அமைப்புகள் நீண்ட காலமாக கூறி வருகின்றன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக கள் இறக்கும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பெரிய தாழையில் இன்று பனை மரம் ஏறி கல் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். சீமான் நேரடியாக களமிறங்கிய இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணிபோல் கட்டைகளை வைத்து கட்டியிருந்தனர். கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனைமரம் ஏறிய சீமான் கள் இறக்கினார். அவருடன் பனை மரம் ஏறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர். தடைகளை மீறி நாட்டுப்புற பாடல்களுடன் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கள் இறக்கும் போராட்டம் அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.