அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியில் இணைந்த கையோடு தற்போது முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் வேகத்துடன் செங்கோட்டையன் செயல்பட்டு வருகின்றார்.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெகவை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்றும், விஜய்யை நேரடியாக முதல்வராக நினைக்கிறார் என்றும் விமர்சித்திருந்தார். நயினார் நாகேந்திரனின் பேச்சு தவெக தரப்பை கோபமடைய செய்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செங்கோட்டையன் நயினார் நாகேந்திரன் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், நயினார் நாகேந்திரன் எங்கெங்கு சென்றார், எத்தனை தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார் என்பதெல்லாம் எனக்கு தெரியும். ஆனால் இன்று தவெகவை பார்த்து அவர் சவால்விடுகிறார்.. ஒரு வார்டில் கூட தவெகவால் வெல்ல முடியாது என்கிறார்.. நான் சொல்கிறேன்.. நயினார் நாகேந்திரன் எங்கு போட்டியிட்டாலும், அவரை டெபாசிட் இழக்க செய்வதில் தான் தவெகவின் வெற்றி அடங்கி இருக்கிறது.
நம்மை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு இளைஞர்களான நீங்கள் பாடம் புகுட்ட வேண்டும். நயினார் நாகேந்திரன் எந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்று தேடிக் கொண்டே இருப்பார்.. ஆனால் தவெக தலைவர் விஜய் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவார்.. 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என்று கூறினார்.



