கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கெட்டி செவியூரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை மற்றும் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. காளான் சேகரிக்கவும், கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்கவும் அப்பகுதி மக்கள் இந்தக் தோட்டத்திற்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை, கும்மிபனையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மோகனின் வாழைத் தோட்டத்திற்கு வந்தபோது, வயல் வரப்பில் ரத்தக்கறை படிந்த சிறிய கத்தி ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். ரத்தம் சிதறியிருந்ததோடு, அருகில் புதிதாக குழி தோண்டி மூடப்பட்டிருந்த அடையாளம் இருந்ததைக் கண்டு, அவர் உடனடியாகத் தோட்ட உரிமையாளருக்குத் தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தகவலின் பேரில் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நம்பியூர் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் பெருந்துறை மருத்துவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில், சந்தேகத்திற்குரிய அந்தக் குழியைத் தோண்டினர். சுமார் 3 அடி ஆழத்தில், அமர்ந்த நிலையில் நிர்வாணமாக இருந்த இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சடலம் மீட்கப்பட்ட இடத்திலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும் என்றும், அவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டும், சிறிய கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தியும் கொலை செய்யப்பட்டு, பின்னர் புதைக்கப்பட்டுள்ளார் என்றும் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.
கொலையாளியை அடையாளம் காண, திருப்பூரிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் அங்கிருந்து கோபி-திருப்பூர் சாலை வரை சென்று திரும்பிய நிலையில், யாரையும் அடையாளம் காட்டவில்லை. கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரிந்தால் மட்டுமே கொலையாளியை கண்டறிய முடியும் என்பதால், சிறுவலூர் போலீசார் தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அடையாளம் தெரியாத இளம்பெண் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : மிளகாய் தூளை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..? நிபுணர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!



