சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் லிபின் ராஜ் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். இந்த அறிமுகம் விரைவில் காதலாக மாறியது. காதலில் இருந்தபோது, லிபின் ராஜ் அந்தப் பெண்ணிடம் ஆடை இல்லாமல் வீடியோ காலில் பேச சொல்லியுள்ளார். காதல் மயக்கத்தில் அந்தப் பெண்ணும் அவர் சொன்னதை கேட்டு நிர்வாணமாக பேசியுள்ளார்.
அப்போது, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் லிபின் ராஜ் அவரது நிர்வாணப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த இளம் பெண்ணைத் தொலைபேசியில் அழைத்த லிபின் ராஜ், அவரிடம் உள்ள ஆபாசப் புகைப்படங்களை காட்டி மிரட்ட தொடங்கியுள்ளார். தான் சொல்வது போல சென்னை, பெரியமேட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வர வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
மானம் போய்விடக் கூடாதே என்ற அச்சத்தில், அந்த இளம் பெண்ணும் லிபின் ராஜ் கூறியதுபோல தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளார். அங்கு லிபின் ராஜ் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோன்று, மிரட்டி அந்த இளம் பெண்ணை அவர் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
மூன்றாவது முறையாக லிபின் ராஜ் விடுதிக்கு வருமாறு அழைத்தபோது, அந்த இளம் பெண் வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த லிபின் ராஜ், இளம் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை அவரது தாயாரின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தாயார், உடனடியாக இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை, மிரட்டல் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட லிபின் ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள செட்டிவளை புதுக்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, லிபின் ராஜை கைது செய்த காவல்துறையினர், இதேபோன்று வேறு எந்தப் பெண்களிடமாவது அவர் அத்துமீறி நடந்துள்ளாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



