பெங்களூருவில் தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு பானசவாடியைச் சேர்ந்த மாணவி அம்ருதா அதே பகுதியில் அமைந்துள்ள மரியம் நிலையா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். பெற்றோர்கள் இது பற்றி விசாரித்ததில் ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்வின்போது மாணவி அம்ருதா பார்த்து எழுதியதாக கூறப்படுகின்றது. இதனால், ஆசிரியர் பல மாணவர்கள் முன்னிலையில் வைத்து திட்டியுள்ளார்.இந்த அவமானத்தை தாங்க முடியாத மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் இருந்து ஒரு கடிதம் சிக்கியது. அதில், அம்மா, அப்பா, தாத்தா, மாதா, ஜியா, தியா எல்லாரும் என்னை மன்னியுங்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கின்றேன். என்னால்இந்த குற்ற உணர்வுடன் வாழ முடியாது. என்னால் அதை மறக்க முடியவில்லை.’’ என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீதும், பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஷாலினி என்ற ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி முன்பு மாணவியின் உடலுடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசில் புகார் அளித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள், பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனிடைய மாணவியின் உறவினர்கள் ஆசிரியர்களிடம், மாணவி எப்படிப்பட்டவர் என்பது தெரியவில்லையா?. எல்.கே.ஜி.யில் இருந்து பத்து வருடமாக இங்குதானே படித்து வருகின்றார். யார்? எப்படி என தெரியவில்லையா? என கதறி அழுதவாறு கேட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
போலீஸ் உறுதியளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதே போல ஹெக்டே நகரில் கடந்த வாரம் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.