தன்னை விட்டு பிரிந்து 2-வது திருமணம் செய்த கணவரை அவரது முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (28). இவருக்கும் ஸ்ரீகாந்த் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்துக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அதன்பிறகு ஸ்ரீகாந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர், வாரங்கல்லில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஹன்மகொண்டாவில் வசித்து வருகிறார்.

இதையறிந்த அகிலா நேற்று தனது உறவினர்களுடன் ஹன்மகொண்டா சென்று ஸ்ரீகாந்த்தை ஸ்வர்ணபள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், ஸ்ரீகாந்த்தை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் செருப்பை மாலைபோல் அணிவித்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டனர். அகிலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.