பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் 36 நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு பயணம் செல்வதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய விமர்சனங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், பிரதமர் மோடியின் ராஜாங்க ரீதியிலான பயணங்கள் மூலமாக இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்து இருப்பதாகவும் முக்கிய அலுவல் பயணமாகவே பிரதமர் சென்று வருவதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரன் கூறுகையில், “பிரதமர் மோடி சமீபத்தில் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்திற்கான மொத்த செலவு ரூ.32,09,760 ஆக உள்ளது. பிரதமர் மோடியின் செப்டம்பர் 26-28 வரை ஜப்பான் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்திற்கு ரூ.23,86,536 செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக மொத்தம் ரூ.239 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்க பயணத்திற்கு ரூ.23 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 36 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்” என்றார்.
பிரதமர் மோடியின் இந்த வெளிநாட்டு பயணத்தால் இந்தியா தனது நட்பு நாடுகளுடன் உறவை வலுப்படுத்தியாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டு இருப்பதாவது, “பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நட்பு நாடுகளுடான உறவை இந்தியா வலுப்படுத்த உதவியது. தேசிய நலன்கள்,வெளிநாட்டு கொள்கைகளை பூர்த்தி செய்ய பிரதமரின் இந்த பயணம் முக்கியமானதாக அமைந்தது. பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம், சைபர் பாதுகாப்பு உள்பட பலதரப்பு விவகாரங்களில் இந்தியாவின் கண்ணோட்டத்தை உலக அளவில் எடுத்து வைக்கவும் முன்வைக்கவும் பிரதமர் மோடியின் பயணங்கள் உதவிகரமாக அமைந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.