50 வயது பெண்ணை இரண்டு காவலர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வழக்கம் போல விவசாய வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள வயல் பகுதியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குடிபோதையில் இருந்த காவல்துறையினர் இருவர் அங்கு வந்துள்ளனர். போதையில் தனியாக இருந்த 50 வயது பெண்ணிடம் அத்துமீறி அங்கேயே வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், அந்த பெண் படுகாயம் அடைந்து, அவருக்கு அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் வயலில் காயமடைந்திருந்த பெண்ணை மீட்டு தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் உறவினர் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர்கள் கிருஷ்ண காந்த் திவாரி, அஜய் பாரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினரே இதுபோன்ற கொடூர குற்றச்செயலில் ஈடுபட்டது ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.