தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்ன முன்னாள் அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி பேசுகையில், தேர்தலில் ஒரு ஓட்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும். அதற்காக வாக்காளருக்கு ஒரு ஓட்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர்.