கர்நாடக மாநிலம், ஹாசன் டவுன், பொம்மநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பரத். அரிசிகெரே பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பரத், சரண்யாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக பரத் தன்னுடைய காதலை வெளிப்படுத்திய நிலையில், சரண்யா அவரது காதலை ஏற்று கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பரத், சரண்யாவை கொலை செய்ய திட்டமிட்டததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி ஹாசன் படாவனே பகுதியில் சரண்யா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வேகமாக வந்த பரத், சரண்யா மீது பலமாக மோதியுள்ளார். இதனால் சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்ட சரண்யா பலத்த காயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதியன்று சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஹாசன் படாவனே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் காதலை ஏற்க மறுத்ததால் சரண்யாவை, பரத் கார் ஏற்றி கொன்றது தெரியவந்தது. இந்த நிலையில், பரத்தை நேற்று இரவு கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.