நந்தனம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால், இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது ‘விளையாத் புத்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பு கேரள மாநிலம் மறையூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சண்டை காட்சியின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நடிகர் பிருத்விராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பிருத்விராஜிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, அறுவை சிகிச்சை செய்தால் குறைந்தது 2 மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, நடிகர் பிருத்விராஜ் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.