நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன், ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆன ’சியா’ என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன், மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த நிலையில், தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து அகன்ஷா வெளியே வராத நிலையில், சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், ஓட்டலுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். பிறகு, அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில், பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், ‘ எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல… யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்’ என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.