5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் வரதட்சணையும் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர் மீது 4-வது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் மேலூர் குப்பத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவர், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ’அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகம் (42) என்பவருக்கும், தனக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிருந்தாவனம் பிள்ளையார் கோவிலில் பெற்றோர் சம்மதத்துடன் எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு சீர் வரிசையாக 6 பவுன் நகையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் பெற்றோர் வழங்கினார். அதன் பிறகும் வரதட்சணை கேட்டு சீனு துன்புறுத்தினார். இதனால், தான் தாய் வீட்டிற்கு வந்துவிட்டேன். எனவே, கணவர் சீனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சீனு குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. அவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்திருப்பதாகவும் அதை மறைத்து நான்காவதாக தன்னை திருமணம் செய்ததோடு, 5ஆவதாக மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக காயத்ரி தெரிவித்திருந்தார். மேலும், நிலத்தரகர் எனக்கூறிய சீனு, வேலைக்கு செல்லாமல் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தன்னை ஏமாற்றியது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஆட்களை அனுப்பி தன்னையும் தனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டில் விடுத்ததாக காயத்ரி தெரிவித்துள்ளார். இதனால், தனக்கு நேர்ந்தது போல் வேறு எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது என்ற நோக்கத்தில், புகார் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காயத்ரி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.