நடிகர் தனுஷின் ”நானே வருவேன்” திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் தனுஷ் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் காலை காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் அவருடைய பேனருக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி, பட்டாசுகள் வெடித்ததோடு கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தும், கையில் கற்பூரம் ஏற்றியும் படத்திற்கு வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக ’நானே வருவன்’ திரைப்படத்தை வரவேற்று நடுக்கடலில் புதுச்சேரி மாநில நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்தனர். இதே போல் தனுஷ் பட பேனரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் ரசிகர்கள் வாழ்த்து பேனர் பிடித்து மகிழ்ந்தனர்.