பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்து சிறுவனை மாணவியின் அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்தவர் தயா குமார் (12). இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்த நிலையில், சிறுவனின் உடல் ஒன்று சிதைந்த நிலையில் ரயில்வே தண்டவாளம் அருகில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், சடலத்தை கைப்பற்றி விசாரித்தபோது, அது காணாமல் போன சிறுவன் தயா குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தெரியவந்தது. சிறுவன் தயா குமார் படிக்கும் பள்ளியில் அவரது அக்கா 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அக்காவுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில், சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி உதவ சிறுவன் தயா குமார் முடிவெடுத்துள்ளார். அதன்படி தேர்வு நடைபெற்றபோது தேர்வு அறைக்கு வெளியே இருந்து தயா குமார் பிட் பேப்பரை அக்காவை நோக்கி வீசியுள்ளார். ஆனால், அந்த பேப்பர் அக்காவின் அருகில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மற்றொரு மாணவியின்மேல் விழுந்துள்ளது. அதனை பார்த்த அந்த மாணவி தயா குமார் தனக்கு காதல் கடிதம் கொடுப்பதாக நினைத்து இது குறித்து அதே பள்ளியில் படிக்கும் தனது அண்ணனிடம் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவியின் அண்ணன் தனது நண்பர்களோடு சேர்ந்து தயா குமாரை தாக்கி அவரை அடித்தே கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுவன் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.