பெங்களூருவில் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் பேருந்து சக்கரத்தில் மாணவி சிக்கியதை அடுத்து சக மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர்.
பெங்களூருவில் ஞானபாரதி கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த வழியாக பேருந்தில் வந்த கல்லூரி மாணவி ஷில்பா(23) கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்து திடீரென இயக்கப்பட்டதால் கீழே விழுந்த அவர் சக்கரத்தில் சிக்கினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு சக மாணவர்கள் மாணவியை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்றனர்.
இதனிடையே பேருந்தை அப்படியே விட்டு விட்டு ஓட்டுனரும் , நடத்துனரும் தப்பி ஓடினர். அவர்களை கைது செய்ய வலியுறுத்தி சக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சில பேருந்துகள் அந்த நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை என குற்றசாட்டு வைத்தனர். ஊழியர்களின் அலட்சியத்தால் மாணவி படுகாயம் அடைந்ததாக மாணவர்கள் புகார் அளித்தனர்.
மாணவி படுகாயம் அடைந்த நிலையில் பன்னார்கட்டா சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க இனி அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.