பிடித்த யூடியூபரை பார்க்க 300 கி.மீ. பயணித்த சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபரான நிஸ்சய் மல்ஹான், Triggered Insaan என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் ரோஸ்ட், காமெடி மற்றும் கேமிங் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பெரிய ரசிகராக உள்ளான். இந்த சிறுவனுக்கு நிஸ்சய் மல்ஹானை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுவன் வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பஞ்சாப்பில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளான். தனது வீடு உள்ள பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இருந்து சைக்கிளை மிதித்துக்கொண்டு சுமார் 300 கிமீ தூரம் வரை பயணம் செய்துள்ளான். இதற்கு அந்த சிறுவனுக்கு 3 நாட்கள் ஆகியுள்ளது.
சிறுவன் கடந்த 4ஆம் தேதி வீட்டை விட்டு புறப்பட்ட நிலையில், அவனது பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். சிறுவனை குறித்து சமூக வலைத்தளங்களில் குடும்பத்தினரும், போலீசாரும் அலெர்ட் கொடுத்து வந்த நிலையில், டெல்லி சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் சிறுவன் பயணித்தது தெரியவந்துள்ளது. பின்னர் டெல்லி காவல்துறைக்கு தொடர்பு கொண்டு சிறுவனின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
இந்த சுவாரசிய கதையில் ட்விஸ்ட் என்னவென்றால், 300 கிமீ தூரம் மூன்று நாட்கள் சைக்கிள் ஓட்டி வந்தும் சிறுவனுக்கு தன்னுடைய ஆசை நிறைவேறாமல் போனது தான். யூடியூபர் நிஸ்சய் தற்போது டெல்லியிலேயே இல்லை. துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, சிறுவனின் இந்த முயற்சி தற்போது பலன் அளிக்கவில்லை. இருப்பினும் சிறுவனின் குடும்பத்தினர் டெல்லி வந்து அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக இருந்தது நிம்மதியை அளிப்பதாக யூடியூபர் நிஸ்சய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.