வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்தாலும் அவரது சொத்து அல்லது வாரிசுதாரரிடம் இருந்து அபராதம் வசூலிக்கவேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்தவர் தொட்டில் கவுடா. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் விதிகளை மீறி மின்இணைப்பு பயன்படுத்தி வந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கு ஹாசன் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2003 மின்சார சட்டம் 135 மற்றும் 138 பிரிவுகளின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டதையடுத்து தொட்டில் கவுடா ரூ.29,204 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று தொட்டில் கவுடா சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்தநிலையில், தொட்டில் கவுடா காலமானார். இந்தநிலையில், தற்போது தொட்டில் கவுடாவின் மேல்முறையீட்டு மனு, நீதிபதி சிவசங்கர் அமரன்னவர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, விதிகளை மீறி மின் இணைப்பு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹாசன் கூடுதல் செசன்சு நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், தொட்டில் கவுடாவின் வாரிசுகள் வழக்கில் தொடர்பு இல்லாமல் உள்ளனர் என்ற வழக்கறிஞரின் கருத்தை ஏற்காத நீதிமன்றம், மனுதாரர் மரணமடைந்தாலும் அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படாது என்றும் இந்த அபராதத்தை அவரது சொத்தில் இருந்து அல்லது வாரிசுகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.