குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. மேலும் குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவை திரும்பப் பெறக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், பயங்கரவாத குழுக்கள் “இஸ்லாமிக் ஸ்டேட் கொராசன் பிரதேசம்” (ஐஎஸ்கேபி), குஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வலதுசாரி தலைவர்களை தாக்க பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளன. பில்கிஸ் பானுவின் தண்டனைக் கைதிகளை விடுவித்ததை மையப்படுத்தி குஜராத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்க ஐஎஸ்கேபி திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை கூறுகிறது. குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் கலவரத்தை ஏற்படுத்துவது அவர்களின் நோக்கமாக உள்ளது.
வரும் வாரங்களில் இளைஞர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகள், மதத் தலைவர்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆக்கிரமித்ததில் இருந்து, ஐஎஸ் ஆதரவு பயங்கரவாத குழுவான ஐஎஸ்கேபி, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லக்சர்-இ-தொய்பா போராளிக் குழுவின் உதவியுடன் இந்தியாவில் தனது சொந்த படைகளை உருவாக்க முயன்று வருகிறது. இந்தியாவில் இருக்கும் இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்க தீவிரவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் அமைதியின்மை ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே முடுக்கிவிடப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைவருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரான தற்கொலைப்படை நபரை சமீபத்தில் ரஷிய மத்திய பாதுகாப்பு சேவை கைது செய்துள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த விரிவான திட்டங்கள் பற்றி ரஷிய அதிகாரிகள் உதவியுடன் இந்திய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.