ஆட்டிறைச்சி சமைப்பதில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சமாதானப்படுத்த வந்த பக்கத்து வீட்டுக்காரர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு ஏர்வார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டிற்கு ஆட்டிறைச்சி வாங்கி வந்துள்ளார். ஆனால், அதை அவரது மனைவி சமைக்க மறுத்ததுடன் செவ்வாய்க்கிழமை நல்ல நாள், இன்று ஆட்டிறைச்சி சமைத்தால் குடும்பத்திற்கு ஆகாது என கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஒரு கட்டத்தில் பப்புவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பயங்கர சண்டை வெடித்து கைகலப்பாக மாறியது.
சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர் பில்லு என்பவர் அவர்களை சமாதானம் செய்து வைத்தார். ஒருவழியாக அவர்களுக்கு இடையே சண்டை ஓய்ந்தது. இதனையடுத்து, பில்லு வீடு திரும்பிய நிலையில், சிறிது நேரம் கழித்து பில்லுவின் வீட்டிற்குப் பின் சென்ற பப்பு, அங்கிருந்த பில்லுவை சரமாரியாக தாக்கி கொலை செய்தார். அதில், சம்பவ இடத்திலேயே பில்லு உயிரிழந்தார். இதையடுத்து, பில்லுவின் மனைவி பப்பு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பப்புவை கைது செய்தனர்.