திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், கணவன் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்துள்ள சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பெண் கடந்த 2014ஆம் ஆண்டு வீரராஜ் வர்தன் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் கணவர் இறந்த நிலையில், மேட்ரிமோனி மூலம் வீரராஜை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு முதல் கணவனிடம் இருந்து 14 வயது மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணுடன் பல மாதங்களாக உடலுறவு வைத்துக் கொள்ள வீரராஜ் மறுத்துவிட்டார். இதைப் பற்றி அந்த பெண் விசாரித்த போது, பல ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்ததாகவும் அதை தொடர்ந்து பாலியல் திறனை இழந்ததாகவும் வீரராஜ் கூறியுள்ளார்.
மேலும், அறுவை சிகிச்சை மூலம் அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் 2020ஆம் ஆண்டில் எடை குறைப்பதன் ஒரு பகுதியாக இளம்பெண்ணின் கணவருக்கு மீண்டும் கொல்கத்தாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்தப் பெண் மீண்டும் இதுபற்றி துருவி கேட்க வீரராஜ் உண்மையை கூறிவிட்டார். தான் ஒரு பெண்ணாக இருந்ததாகவும், பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாக ஆணாக மாறியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோத்ரி போலீசாரிடம் மோசடி புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து வீரராஜிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.