மனநலம் பாதிக்கப்பட்ட 58 வயதான நபரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தின் லிங்சுகூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாமப்பா ஹரிஜன் (58). இவர் ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஓயாத வயிற்று வலி காரணமாக அவரை அவரது குடும்பத்தார் பாகல்கோட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் அதிகமாக சில்லறை நாணயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் சுமார் 1.5 கிலோ அளவிற்கு நாணயங்கள் இருந்துள்ளது.
5 ரூபாய் நாணயங்கள் 56-ம், 2 ரூபாய் நாணயங்கள் 51-ம், 1 ரூபாய் நாணயங்கள் 80-ம் என 187 நாணயங்கள் இருந்துள்ளன. மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்த தியாமப்பா, நாணயங்களை விழுங்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின் அனைத்து நாணயங்களையும் மருத்துவர்கள் அகற்றினர். தற்போது தியாமப்பா நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.