சிறுமியை கொன்றதாக குற்றம்சாட்டி தனது மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், 7 ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத சிறுமியின் உடலை, ஒரு நபர் தனது மகன் என்று கூறி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுமியைக் கடத்தி கொலை செய்யப்பட்டதாக விஷ்ணு என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன் விஷ்ணுவின் தாயார் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து இறந்ததாக கூறப்படும் பெண் உயிருடன் இருப்பதாக கூறினார். மேலும், அந்த பெண் திருமணமாகி குழந்தைகளுடன் வசிப்பதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரிக்கும் போது அந்த பெண் ஹத்ராஸ் மாவட்டத்தில் தனது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து அலிகார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவளது அடையாளத்தைக் கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தையும் அந்த பெண்ணை தனது சொந்த மகள் என அடையாளம் காட்டியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாக சொல்லப்பட்ட பெண் உயிருடன் வந்தது அந்த பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொன்றதாக குற்றம்சாட்டி தனது அப்பாவி மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்ணுவின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.