தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க, உத்தவ் தாக்கரே அணியினர் 2 லாரிகளில் பிரமாணப் பத்திரங்களை எடுத்துச் சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியது. மேலும், உத்தவ் தாக்கரே – ஷிண்டே அணிக்கு தனித்தனி பெயர், சின்னத்தை வழங்கியது. அத்துடன், யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அணியினர் இரண்டு லாரிகளில் பிரமாணப் பத்திரங்கள், ஆவணங்களை கொண்டு சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, தேர்தல் ஆணைய விவகாரங்களை கவனித்து வரும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் அனில் தேசாய் கூறுகையில், “கட்சியினர் சுமார் 11 லட்சம் உறுப்பினர் படிவங்களை சேகரித்தனர். ஆனால் இந்த படிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. எனவே, 8.5 லட்சம் உறுப்பினர் படிவங்களையும், 2.62 லட்சம் நிர்வாகிகளின் பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்துள்ளோம். மேலும், சில மாவட்டங்களுக்கான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார்.