அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவியை உள்ளூர் ரவுடிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான சிறுமிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜம்தோலி பகுதியில் அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரை உள்ளூர் ரவுடிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ப்பூரில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இச்சிறுமிகள் வீதியில் இறங்கியும், வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர். மேலும், தாங்கள் ஏற்கனவே குற்றவாளிகள் குறித்து புகார் அளித்ததாகவும், ஆனால், காவல்துறையினர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் ஜெய்ப்பூர் கனோட்டா காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சிறுமிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். முன்னதாக, சிறுமிகளின் புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
