மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் புதுமாப்பிள்ளை ஒருவர் லேப்டாப்புடன் தீவிரமாக பணியாற்றிக் கொண்டு இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வசதி உலகம் முழுவதும் பரவலானது. கொரோனா ஏற்படுத்திய ஊரடங்கால் ‘Work From Home’ வசதியை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளித்தன. தொற்று பரவல் குறைந்தாலும் பல நிறுவனங்களும் இந்த வசதியை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் கூடுதல் நேரம், வீட்டில் உள்ளவர்களுடன் கூடுதல் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைப்பதால் ஊழியர்கள் பலரும் இதை விரும்பவும் செய்கின்றனர். வீட்டில் இருந்தே பணியாற்றுவதால் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்குகளை முடிப்பதற்காக கால நேரம் இன்றி லாக்கின் செய்யுவும் செய்கின்றனர். இந்த நடைமுறை எந்த அளவுக்கு ஒருவரின் இயல்பு வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது என்பதை கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் மேடையில் லேப்டாப்புடன் அமர்ந்து இருக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேடையில் சில சடங்குகள் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாத மணமகன் பிஸியாக தனது லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டு இருக்கிறார். ‘Calcutta Instagrammers’ என்ற இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. மணமகன் திருமணத்திற்கு தயராக மணமேடையில் பாரம்பரிய உடையுடன் அமர்ந்து இருக்கிறார். அப்போதும் கூட தனது மடியில் லேப்டாப் ஒன்றை வைத்துக்கொண்டு தீவிரமாக ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருப்பதை காட்டும் வகையில் உள்ளது. உண்மையில் அவர் தனது அலுவலக வேலையைத்தான் செய்தாரா அல்லது தனது சொந்தப் பணிகள் எதையும் செய்தாரா என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால், தனது அலுவல் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கலாம் என்று பொதுவாக நெட்டிசன்கள் பலராலும் யூகிக்கப்படுகிறது.
’Work From Home’ உங்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்துச்செல்லும் போது என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமணத்தின் போது இதேபோன்றுதான் இருப்பார் என்று நீங்கள் நினைக்கும் நபரை டேக் செய்து விடுங்கள் எனவும் பதிவிடப்பட்டு இருந்தது. இந்த பதிவு இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் உண்மையிலே அவர் லேப்டாப் தனது அலுவல் வேலைக்காக பயன்படுத்தினாரா.. அல்லது, வெறுமனே மேடையில் புகைப்படத்திற்காக எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை என சந்தேகமும் கிளப்பியுள்ளனர்.