புதிய பைக்கை ஓட்டிப் பார்க்க கொடுக்காததால், நண்பர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சேரி பகுதியில் மிதுன் என்ற இளைஞர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரின் நண்பர் வைசாக் என்பவர் கடந்த நவம்பர் 28ஆம் தேதி மிதுனுடன் பைக்கை இரவலாக கேட்டுள்ளார். தான் புதிதாக எடுத்த பைக்கை கொடுக்க முடியாது என மிதுன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த வைசாக், செல்போன் கடைக்குள் வைத்து மிதுனை சரமரியாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் மிதுன் கதறி கதறி அழுதுள்ளார்.
மிதுன் hemophilia நோயாளி என்பதை தெரிந்தும் வைசாக் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த மிதுன், தற்போது வரையிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய அடுத்த நாளே திருச்சூர் போலீசார் வைசாக்கை கைது செய்தனர். விசாரணையில் இவர் மீது வேறு பல வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. மேலும், அந்த கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.