தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கள்ளக்காதலனின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள மஹெவகஞ்ச் பகுதியில் தனது 14 வயது மகளுடன் வசித்து வருபவர் 36 வயது பெண். இவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரை விட்டு பிரிந்து 32 வயதுடைய நபருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தனது விவசாய பணியை மேற்கொண்டிருந்த அப்பெண் எதேர்ச்சையாக தனது வீட்டுக்கு வந்த போது அந்த காதலன் தன்னுடைய மகளிடம் தவறாக நடந்துக் கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அந்த பெண்ணையும் அந்த நபர் தாக்க முயற்சித்துள்ளார்.

இதனால் தன்னுடைய மகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து காதலனின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அப்பெண், “என் மகளை காப்பாற்றுவதற்காகத்தான் இப்படி செய்தேன். இதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை” எனக் கூறியுள்ளதை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி மூலம் அறிய முடிகிறது. இந்த சம்பவத்தை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவு 376ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆணுறுப்பில் வெட்டப்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அந்த நபர் உயர் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி சந்திரசேகர் சிங் தெரிவித்துள்ளார்.