டெல்லியில் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்களது மகளின் உடல் உறுப்புகளை அகற்றி பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த15 வயது சிறுமி, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த மாதம் 21ம் தேதி சிறுமி இந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு குடல் அழற்சி அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 26ம் தேதி சிறுமி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களது மகளின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் செய்தனர். அப்போது, சிறுமியின் வயிற்றில் வெட்டு காயங்கள் இருப்பதாகவும், சில உறுப்புகள் அகற்றப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் தையல் போடப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இது குறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் டெல்லி போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவ வாரியத்தை அமைக்குமாறு டெல்லி அரசை போலீசார் கேட்டுக் கொண்டனர். தற்போது சிறுமியின் உடல் தேஜ் பகதூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.